இந்த அத்தியாயத்தில் காப்பீடு என்றால் என்ன, காப்பீட்டு வகைகள் என்னென்ன, இவைகளுக்கிடையிலான வித்தியாசங்கள் யாவை என்பதைப் பற்றி அறியலாம்.
காப்பீடு என்றால்.....
நமது ஊர்களில் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு வளைகாப்பு என்ற ஒரு சடங்கை நடத்துவார்கள். இதன்மூலம், அந்தப் பெண் பிரசவம் சார்ந்த ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப்படுவதற்காகத் தான் இம்மாதிரி நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆக, காப்பு என்பது ஒருவரை எதிர்கால ஆபத்துக்களில் இருந்து காப்பதற்குத் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா? அந்த வகையில் காப்பீடு என்பது ஒருவர் தன் தொழில் சார்ந்த அசைகின்ற / அசையாத பொருட்களை, ஒரு சிறு தொகை செலுத்தி ஒரு பெரிய இழப்புகளில் இருந்து பொருளாதார அளவில் தன்னை / தன் தொழிலைக் காத்துக் கொள்ள செய்து கொள்ளும் ஒரு ஏற்பாடே ஆகும். காப்பீடு=காப்பு+ஈடு. இங்கு ஈடு என்பது ஒருவர் செலுத்தும் தொகையான பிரிமியம்-ஐ குறிக்கும். இதனை காப்பீட்டிற்கான விலை என்று கூட சொல்லலாம். ஒரு பொருளை வாங்கும் போது அதற்கென்றுள்ள விலை போல ஒவ்வொரு காப்பீட்டு வகிக்கும் விலை உண்டு, அதுவே, "பிரிமியம்".
பொதுவாக, காப்பீடு, இந்தியாவைப் பொருத்தமட்டில் ஆயுள் காப்பீடு, பொதுக்காப்பீடு என்று பிரித்துள்ளனர். ஆயுள் காப்பீடு, மனிதர்களுக்கான காப்பீட்டை மட்டும் தருகிறது. மரணம், விபத்து, நோயினால் ஏற்படும் இழப்பு என்பன போன்ற வகைகளில் செயல்படுகிறது. பொதுக்காப்பீடு எனப்படுவது (General Insurance or Non-Life Insurance) மனிதர்கள், கால்நடைகள், அனைத்து வாகனங்கள், பயிர்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். காப்பீட்டின் (Insurance) வரலாற்றை பின்னர் பார்ப்போம். இந்தியாவில், இன்சூரன்ஸ் (காப்பீடு) வணிகம் தனியாரை அனுமதிக்கும் முன்பாக, ஆயுள் காப்பீட்டைப் பொருத்தமட்டில், எல் ஐ சி -யும், பொதுக்காப்பீட்டைப் பொருத்தமட்டில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், நியு இந்தியா அஸ்யூரன்ஸ் , ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் வணிகம் புரிந்தன. தற்போது பல தனியார் நிறுவனங்கள் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டில் ஈடுபடுகின்றன.